Monday, October 23, 2017

#கன்னிமார்குளம் #பாளையங்கால்வாய் #நிலத்தடிநீர் #சுத்தம் #சுகாதாரம்

பாதுகாத்திட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம்
பசுமை மேலப்பாளையம் திட்டம் சார்பாக புகார் மனு

23/10/2017

பெறுநர்:
உயர் திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருநெல்வேலி,

பொருள்: மேலப்பாளையம் மக்களின் நிலத்தடி நீர் ஆதாரத்தினை பாதுகாக்க  ஆவண செய்ய வேண்டி!

உயர் திரு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு,  
எங்களது மேலப்பாளையம் மண்டலம் நெல்லை மாநகராட்சியின் இதயப்பகுதி ஆகும். தற்போது மிக மோசமான சுகாதாரக்கேடுகளால் இயற்கை அன்னை வழங்கிய பொலிவை இழந்து நிற்கிறது.

எனவே இந்நிலையை மாற்ற தமிழக அரசின் உதவியை எதிர்பார்த்து இருக்கிறோம். அதனை தாங்கள் தயவுகூர்ந்து நிறைவேற்றி தர வேண்டி கீழ் கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறோம். 

கோரிக்கைகள்:

1.நெல்லை மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டலத்தில் மக்கள் தொகை கணக்கிற்கு ஏற்ப சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து சுகாதார பணிகளை மேம்படுத்தவும், கழிவுநீர் ஓடைகளை தூர்வாரி மூடியிடப்பட்ட கழிவுநீர் ஓடைகளாக மாற்றித்தரவும் தாங்கள் ஆவண செய்ய வேண்டுகின்றோம்.

2. மேலப்பாளையத்தின் விரிவாக்க பகுதிகளான ஃபாத்திமா நகர்1&2, பூங்கா நகர், புதுக்காலணி NSR காலணி(பிறை நகர்) போன்ற பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்துதர தாங்கள் ஆவண செய்ய வேண்டுகின்றோம்.

3. இப்பகுதியில் பன்னெடுங்காலமாக நிலத்தடி நீரை சேமித்து வைப்பதில் முக்கிய காரணியாக பாளையங்கால்வாய் விளங்கிவந்தது. ஆனால் சுமார் 2.50 லட்சம் மக்கள் வாழும் மேலப்பாளையம் மண்டலத்திலிருந்து தற்போது வெளியேறும் மொத்த கழிவுநீரும் பாளையங்கால்வாயில் அனுதினமும் கலந்து வருவதால் பாதாள சாக்கடை திட்டம் மூலமாக வெளியேற்றுவது என்ற திட்டமானது கிட்டத்தட்ட தோல்வியடைந்த திட்டமாகிவிட்டது. இதனால் மண்டலத்தின் அனேக கழிவு நீர்களும் மண்டலத்தின் வீதிகளில் பொங்கி வழிவதோடு பாளையங்கால்வாயில் கலந்து கால்வாயும் மாசுபட்டு மண்டலம் சுகாதார சீர்கேடு அடைவதற்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. மண்டலத்தின் மொத்த கழிவுநீரும் பாளையங்கால்வாயில் கலப்பதால் மாசுபட்டு அது சாக்கடையாக மாறியுள்ளது. எனவே நீர் வரட்சியை தவிர்க்க பாளையங்கால்வாயை தூர்வாரி அதன் கரைகளில் சிமெண்ட் சுவர்கள் அமைத்து கழிவுநீர் கலக்காதவன்னம் தடுத்து அதனை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை தாங்கள் ஆவன செய்ய வேண்டுகின்றோம்.
.

4. மேலப்பாளையத்தில் அமைந்துள்ள கலிமா குளம் என்ற கன்னிமார் குளம் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாததாலும் மேலப்பாளையம் விரிவாக்க பகுதிகளான ஹாமீம்புரம் 12 தெருக்கள், பாத்திமா நகர் I, II, சித்தீக் நகர், பூங்கா நகர், புதுக்காலனி, ஹாஜிரா நகர், பீடி காலனி மற்றும் பல தெருக்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக குளத்தில் கலப்பதாலும் மேற்கண்ட குளமானது சாக்கடைக் கழிவுகளால் நிரம்பி மாசுபட்டு, குளமானது அதன் நீர் தேக்க கொள்ளளவில் இருந்து மிகவும் குறைந்து வருகிறது. இதனால் மேலப்பாளையத்தின் நிலத்தடி நீர் ஆதாரங்களில் ஒன்றாக திகழ்ந்து வந்த குளத்தை சீர்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதன் கரைகளை திடப்படுத்தி, அதனுள் கலக்கும் கழிவுநீரோடைகளை தடுத்து, சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும். மேலும் மேலப்பாளையம் மக்களின் வசிப்பிட பரப்பளவு என்பது பெருநகரங்களுக்கு இணையாக மிகவும் நெருக்கமாக வசித்து வருகின்றனர். ஆனால் இம்மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் இப்பகுதியில் இல்லாத காரணத்தால் மேற்கண்ட கன்னிமார்குளத்தை பாதுகாக்கும் விதமாக குளத்தை தூர்வாரி, குளத்தின் கரையோரத்தில் சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா ஒன்றை அமைத்து தர வேண்டுகின்றோம்.

.  

ஆகவே உயர் திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்தப்படுத்துவதன் மூலம் மேலப்பாளையம் மண்டலத்தை ஒரு சுத்தமான, சுகாதாரமான, அடிப்படைக்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்ட மண்டலமாக முன்னேற்றுவதற்கு ஆவண செய்ய வேண்டுமெனெ “பசுமை மேலப்பாளையம் திட்டத்தின்” சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கருவேல மர அழிப்பு நடவடிக்கையாக எங்களது பசுமை மேலப்பாளையம் திட்டம் குழுவினரின் சொந்த முயற்சியால் சுமார் ஐம்பது ஏக்கர் நில பரப்பளவில் பரவி, குளத்தை முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்த கருவேல மரங்களை முற்றிலுமாக அழித்தோம், மேலும் கன்னிமார் குளத்தையும் பாளையங்கால்வாயையும் தூர்வாரிட பல்வேறு மனுக்களை கொடுத்தும் வருகின்றோம், பாளையங்கால்வாய் மற்றும் கன்னிமார் குளத்தை தூர்வாரிட எங்கள் குழுவினர் தயாரக உள்ளோம், எனவே தாங்கள் வருகின்ற கோடைகாலத்தில் தூர்வாரும் அந்த உயரிய பணியில் எங்களை இணைத்தோ, பாளை சட்டமன்ற உறுப்பினருடன் இணைந்து அல்லது தனியாகவோ செயல்பட எங்களுக்கு அனுமதி தந்து வழிகாட்டிட வேண்டிகின்றோம்.

மனு கொடுக்கும் போது SDPI கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட துணைத்தலைவரும் பாளை சட்டமன்ற தொகுதி பொறுப்பு தலைவருமான ஷாகுல் ஹமீது உஸ்மானி, பசுமை மேலப்பாளையம் திட்டக்குழுவின் தலைவர் Y.சலீம், பசுமை மேலப்பாளையம் ஒருங்கிணைப்பாளர் சலீம்தீன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட துணைத்தலைவர் யூசுஃப் ரஹ்மான் மற்றும் SDPI கட்சியின் சுற்றுப்புறச் சூழல் மாவட்ட செயலாளர் ஏர்வாடி ஷேக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

நாள்: 23.10.2017                 
 
இடம்: திருநெல்வேலி

Y. சலீம்
தலைவர்,
பசுமை மேலப்பாளையம் திட்டம் மேலப்பாளையம்