#கோவை சிறையில் உரிய சிகிச்சைக்கு அனுமதி அளிக்காததால் சிறைக்கைதி மரணம்! -
#நீதிவிசாரணை நடத்த தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை
******************
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.எம். தெகலான் பாகவி விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கைதி ஒஜீர் (வயது 48) இன்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
அவருக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாகவே நெஞ்சுவலி அறிகுறி இருந்துள்ள நிலையில், அதற்கான உரிய சிகிச்சையை வெளியில் உள்ள மருத்துவமனையில் பெறுவதற்கு சிறைத்துறை மறுத்து, சிறையில் அளிக்கப்படும் சாதாரண சிகிச்சையை மட்டும் அளித்துள்ளது.
இதன் காரணமாக அவர் மரணமடைந்துள்ளார்.
இந்த மரணம் குறித்து தமிழக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், மரணடைந்துள்ள சிறைக் கைதியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு அளிக்க வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கோவை சிறையில் இதற்கு முன்னரும் உரிய சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்படாதன் காரணமாக, சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகள் சபூர் ரஹ்மான், தஸ்தகீர் ஆகியோர் மரணமடைந்துள்ளனர்.
இவர்களுக்கு உரிய காலத்தில் முறையான மருத்துவ சிகிச்சை பெற அனுமதி அளிக்கப்பட்டிருந்தால் அவர்களின் மரணத்தை தவிர்த்திருக்க முடியும்.
பொதுவாக இதுபோன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகளுக்கு, வெளியில் உள்ள மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெறும் அனுமதி வழங்கப்படும் சூழலில், முஸ்லிம் கைதிகளுக்கு மட்டும் அத்தகைய அனுமதி மறுக்கப்படுகின்றது.
இதன் மூலம் ஆயுள் தண்டனை என்பது முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கு மட்டும் மரணதண்டனையாக மாறிவருகிறது.
சிறைவாசி அபுதாஹிர் குணப்படுத்த முடியாத எஸ்எல்சி எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்லை சேர்ந்த சிறைவாசி மீரான் மொய்தீனுக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடுமையான நோயால் அவதிப்படுகிறவர்களை, உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை விடுதலை செய்யலாமென தமிழ்நாடு சிறைவிதி 632 பிரிவு சொல்கிறது.
சட்டப்படியான அந்த வாய்ப்பு முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கு மறுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குரிய சிகிச்சைகளுக்கும் அனுமதி மறுக்கப்படுகின்றது.
இதன் காரணமாகத்தான் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடிவரும் அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என, கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்கையை கண்டுகொள்ளாமல் தட்டிக்கழித்து வருகின்றது.
கோவை சிறையில் மட்டும் 5க்கும் மேற்பட்ட முஸ்லிம் சிறைக் கைதிகள் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெளியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர்.
ஆனால், சிறைத்துறை அதற்கு அனுமதி மறுத்து வருகின்றது. இதன் காரணமாக அவர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே, தமிழக அரசு அந்த சிறைக் கைதிகள் உரிய காலத்தில் முறையான மருத்துவ சிகிச்சை பெற அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கோவை சிறையில் உரிய சிகிச்சைக்கு அனுமதி கிடைக்காமல் மரணமடைந்த சிறைக் கைதி ஒஜீர் மரணம் குறித்து, நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
https://m.facebook.com/sdpitamilnadu/