Wednesday, November 25, 2015

மக்களை சந்திப்போம் SDPI பிரச்சார பயணம் மாநில தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பு

தமிழகம் தழுவிய மக்களை சந்திப்போம் பிரச்சாரத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி! - SDPI மாநில தலைவர் தலைமையில் சென்னையில் இன்று 25.11.2015 நடைபெற்றது !

************************
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று (நவ.25) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக, மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து, வரும் நவ.28 முதல் டிசம்பர் 13 வரை மாநில முழுவதும் ‘மக்களை சந்திப்போம்’ என்ற பெயரில் வாகன பிரச்சார பயணம் நடைபெறவிருக்கிறது. கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வரை இந்த பிரச்சார பயணம் நடைபெறுகிறது.
பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும், தமிழகத்தின் நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தியும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனையாக உள்ள கட்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும்; விவசாயிகள், தொழிலாளர்களை பாதிக்கும் வகையிலான மக்கள் விரோத சட்டங்களையும், சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு எதிரான போக்கையும் கைவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும் ஆகிய இந்த ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரச்சார பயணம் நடைபெறுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை மதுவால் இன்றைக்கு லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. சமூக சீர்கேடுகளும், குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. ஆகவே, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி உட்பட அனைத்து கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கோரி வருகின்றன. ஆனால் அரசு அதுகுறித்த எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக மது விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. ஆகவே, ஒரு பொறுப்புள்ள அரசாக, குடிமக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் நடவடிக்கையில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த திமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், இதனை 7 சதவீதமாக அதிகரித்து வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த வேளையில், கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரித்து வழங்குவேன் என முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், தேர்தல் முடிந்ததும் அதுகுறித்த எந்த நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை. ஆகவே, முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலையை கருத்தில்கொண்டு இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் பல ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் சிக்கியுள்ளன. இதன் காரணமாகவே சமீபத்திய மழையில் தமிழகம் மோசமான விளைவுகளை சந்தித்து வருகின்றது. மேலும், ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் அமலைச் செடிகளால் தூர்ந்து போய் காணப்படுகின்றன. இதனால் நீர் சேமிப்பது தடைபடுவது மட்டுமின்றி, குடியிருப்புக்குள் அந்த நீர் புகுந்து பேரிடர்களையும் தமிழகம் சந்தித்து வருகின்றது. தமிழகத்தின் பல முக்கிய நதிகள் ஆலைக்கழிவுகளாலும், சாக்கடைகளாலும் நிரம்பி வழியும் அபாயகரமான சூழல் நிலவி வருகின்றது. ஆகவே, தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக மீனவர்களின் வாழ்வுரிமை பிரச்சனையாக நீடித்து கொண்டிருக்கும் கட்சத்தீவு பிரச்சனையில் மத்திய அரசு தமிழர்களுக்கு தொடந்து துரோகம் இழைத்து வருகின்றது. இலங்கைக்கு ஆதரவாக, தமிழக சட்டமன்ற தீர்மானத்துக்கு எதிரான நிலையை எடுத்து வருகின்றது. ஆகவே கட்சத்தீவை மத்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும்.
மேலும், மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பதவியேற்றது முதல் தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகின்றது. அன்னிய மற்றும் தனியார் முதலாளிகளின் நலனுக்காக விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிராக அவசர சட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இது கண்டிக்கத்தக்கது. மேலும், பாஜக தலைவர்கள், அமைச்சர்கள் பலர் நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிராகவும், சிறுபான்மை மற்றும் தலித்களுக்கு எதிராகவும் பேசிவருகின்றனர். இத்தகைய செயல் மதசார்பற்ற இந்திய ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்குகிறது. ஆகவே மத்திய அரசு இத்தகைய போக்கை கைவிட வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் அக்கறை காட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பொருட் சேதத்தையும், உயிழப்பையும் சந்தித்துள்ளன. மழை, வெள்ளம் காரணமாக சுமார் 180 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பல குடியிருப்புகளை சுற்றி இன்னும் மழை நீர் தேங்கியுள்ளதால் அவர்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இத்தகைய பெரும் அவல நிலைக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும், நீர்நிலைகள், மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களை தூர்வாருவதிலும், சீர்செய்வதிலும் தமிழக அரசு மேற்கொண்ட மெத்தனப் போக்கும், அலட்சியமுமே காரணம் என்பதை மறுக்கவியலாது. வெள்ளம் வந்த பிறகு தமிழக அரசும், அதிகாரிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னரே மேற்கொண்டிருந்தால், பெரும் இழப்புகளை தவிர்த்திருக்க முடியும்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த கனமழை வெள்ளம் காரணமாக சுமார் 8 ஆயிரத்து 400 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு மதிப்பிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இதில் 2 ஆயிரம் கோடி ரூபாயை முதல்கட்ட நிவாரணத்திற்காக உடனடியாக மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு முதல்கட்ட நிதியாக ரூ.940 கோடியை வழங்குவதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நிதி போதுமானதல்ல. ஆகவே, மத்திய அரசு தமிழக அரசு கோரியுள்ள முதல்கட்ட நிவாரண நிதியை உடனடியாக வழங்குவதோடு, வெள்ள சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்ய மத்திய ஆய்வு குழுவையும் உடனடியாக அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு, தமிழக வெள்ள பாதிப்பை பேரிடர் நிகழ்வாக அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தமிழக அரசு மத்திய அரசின் நிவாரண நிதியை பயன்படுத்தி, தேர்தல் அரசியல் நோக்கில் செயல்படாமல், உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இதுதொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்து, அனைவரது ஒத்துழைப்புடன் விரைவாக செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக ரூ.5 லட்சம் வெள்ள நிவாரண நிதியாக அளிக்க உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான இல.கணேசன் அவர்கள், தமிழகத்தில் 150 பேர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்திருப்பதாக தெரிவித்திருந்தார். ஐ.எஸ், அமைப்பின் தீவிரவாத செயலால் உலகமே அச்சம் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் யாரும் அந்த இயக்கத்தில் இல்லை என மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. ஆனால், தமிழக மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆகவே தமிழக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் இல.கணேசன் அவர்களை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் ஊடகங்களின் மீதான தாக்குதல்கள், அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன. காரைக்குடியில் செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் 7 தொலைக்காட்சி நிரூபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், 4 ஆண்டுகால தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதற்காக விகடன் மற்றும் முரசொலி நாளிதழ் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அரசின் இத்தகைய அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா, மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், உஸ்மான் கான், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜூனைத் அன்சாரி, தென்சென்னை மாவட்டத் தலைவர் நேதாஜி ஜமால், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பிலால் ஆகியோர் உடனிருந்தனர்.

https://m.facebook.com/sdpitamilnadu/

https://m.facebook.com/makkalaisanthippom/

Tuesday, November 24, 2015

பாப்புலர் பிரண்ட் மாநில செயற்குழு தீர்மானங்கள்

பாபரி மஸ்ஜிதை இடித்த இடத்தில் கட்டக் கோரியும், இடித்த பயங்கரவாதிகளை தண்டிக்க கோரியும்  தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் - 

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழுவில் தீர்மானம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம்

23.11.2015 அன்று திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில்  மாநில தலைவர் M.முகம்மது இஸ்மாயீல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய தலைவர் K.M.ஷரீஃப் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

இச்செயற்குழுவில்  கீழ்க்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன:

தீர்மானம் 1 :

பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம் - தேசிய அளவிலான பிரச்சாரம்
நானூறு ஆண்டுகால வரலாற்று பாரம்பரியமும் முஸ்லிம்களின் வழிபாட்டு தளமுமான பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 23 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் அந்த மாபாதக செயலில் ஈடுபட்டவர்கள் இன்று அரசாங்க உயர் பதவிகளை அலங்கரிக்கும் அவலம் நடந்துள்ளது. பாபரி மஸ்ஜித் குறித்த விழிப்புணர்வை மக்கள் மன்றத்தில் ஏற்படுத்தும் நோக்கில் இந்த வருடம் டிசம்பர் 1 முதல் 10 வரை தேசிய அளவிலான பிரச்சாரம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் திட்டமிட்டுள்ளது.

இதில் போஸ்டர் பிரச்சாரம், துண்டுபிரசுரம் விநியோகித்தல், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் என பல்வேறு வகையிலான பிரச்சாரங்கள் நடைபெறும். பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட  தினமான டிசம்பர் 6 அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்டக் கோரியும், லிபரஹான் கமிஷன் அறிக்கையில் குற்றவாளிகளாக கூறப்பட்டுள்ளவர்களை தண்டிக்க வலியுறுத்தியும் “பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம்”  என்ற பெயரில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்தவும் தீர்மானித்துள்ளது.

பாபரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்டிக் கொடுப்பதன் மூலம்தான் நாட்டின் மதச்சார்பின்மையையும், இறையாண்மையையும் நிலைநாட்ட முடியும் என்பதை உணர்ந்து அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 2 :

திப்பு சுல்தான் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு , வேலூரில் திப்பு சுல்தான் பொதுக்கூட்டத்திற்கு தமிழக அரசு விதித்த தடை கவலை அளிக்கிறது
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை எழுதும் போது அதன் முதல் பக்கங்களில் இடம் பிடிக்கும் 'மைசூர் வேங்கை' தீரன் திப்பு சுல்தானை குறித்து தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வரும் இந்துத்துவ சக்திகளை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
சுதந்திர போராட்டத்தின் போது சுதந்திர போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்தவர்கள் மற்றும் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கு திப்பு சுல்தானின் பெயர் நடுக்கத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்துவது நியாயம் தான்.
ஆனால் இந்த சிறு கூட்டத்தினரின் அச்சுறுத்தலுக்கு செவிசாய்த்து திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களை தமிழகத்தில் தடை செய்திருப்பது மற்றும் வேலூரில் திப்பு சுல்தான் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்திருப்பது  கவலை அளிக்கிறது. தமிழக அரசு மதவாத சக்திகளுக்கு துனைபோகின்றதோ ? என்ற  கேள்வியை மக்கள் மன்றத்தில் எழச் செய்துள்ளது.
சுதந்திர போராட்ட விடிவெள்ளி திப்புவின் வரலாற்றை அனைவருக்கும் அறிய செய்வதும் அதன் ஓர் அங்கமாக திகழும் அவரின் பிறந்தநாளை கொண்டாட அனுமதி வழங்குவதும் அரசுகளின் கடமையாகும். தனது தந்தை ஹைதர் அலீயின் படையில் படைத்தளபதியாக இருந்த திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களை பொலியலூர் போரில் தோற்கடித்தது இதே தமிழக மண்ணில் என்பதால்  தமிழக அரசுக்கு இதில் அதிகப்படியான கடமையும் உள்ளது.
எனவே ஆங்கிலேய ஏகாதிபத்திய சக்திகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து வீரமரணம் அடைந்திட்ட போராளியும், இந்திய சுதந்திர போராட்டத்தின் விடிவெள்ளியும், மதச்சார்பின்மையின் முன்னோடியுமான தீரன் திப்பு சுல்தான் அவர்களின்  வரலாற்றை திரித்துக் கூறிக் கொண்டிருக்கும் மதவாத இந்துத்துவ சக்திகள் மீது நடவடிக்கை எடுக்கவும்,  திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி அவர்களுக்கு மணிமண்டபம் கட்டும் பணியை துரிதப்படுத்தவும் இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

மேலும் திப்பு சுல்தானின் உண்மை வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்லிடும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியாவின் சார்பாக திப்பு சுல்தான் குறித்த மாபெரும் கருத்தரங்கம் டிசம்பர் 10 அன்று சென்னையில் நடத்தவும், டிசம்பர் மாதத்தில் தொடர்  பிரச்சாரம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தவும் இச்செயற்குழு தீர்மானித்துள்ளது.

தீர்மானம் 3 :

மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு -  தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்
தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் –ன் தலைவர்களும், செயல் வீரர்களும் நேரடியாக  களத்திற்கு சென்று தேவையான நிவாரண மற்றும் மீட்பு பணிகளை  தன்னால் இயன்ற அளவில்  தொடர்ந்து செய்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மழைகால நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், அதுபோல் சேத மடைந்த வீடுகளுக்கும், இறந்தவர்களின் குடும்பத்தினர்க்கும் தகுந்த நிவாரணத் தொகையை வழங்க வேண்டுமெனவும் இச்செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4 :

தமிழகத்தில் ஐ.எஸ். பெயர்ப் பட்டியலை இல.கணேசன் வெளியிட வேண்டும்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். இயக்கத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது. இதுப்போன்ற ஐ.எஸ். இயக்கத்தினரின் செயல்பாடுகள் எந்த சமூகத்திற்கும் எவ்வித பலனையும் வழங்காது என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.
அதே சமயத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்க்கிறோம் என்ற பெயரில் இந்தியாவில் மக்களை பிளவுபடுத்தும் வேலைகளை சிலர் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. 'தமிழகத்தில் 150 நபர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் இருப்பதாக' பா.ஜ.க. மூத்த தலைவர் இல. கணேசன் கூறியிருப்பது இந்த ரகத்தை சேர்ந்ததுதான். இல.கணேசனின் இக்கூற்றை வன்மையாக கண்டிப்பதுடன் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் வேலைகளை பா.ஜ.க.வினர் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்றும் இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் தமிழகத்தில் ஐ.எஸ் இயக்கத்தில் இருக்கும் 150 நபர்களின் பெயர்களை  வெளியிட வேண்டும் இல்லாதபட்சத்தில் அமைதிப்பூங்காவான தமிழகத்தின் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் கருத்து வெளியிட்டுள்ள  இல.கணேசன் மீது உரிய வழக்கினை பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு
M.முஹம்மது சேக் அன்சாரி
மாநில பொதுச் செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

https://m.facebook.com/popularfronttamilnadu/

சவுதியில் தவித்த மேலப்பாளையம் வாலிபர் தாயகம் திரும்பினார்

சவுதி அரேபியா ரியாத்தில் தவித்த மேலப்பாளையம் வாலிபர்  இந்திய சோசியல் போரம் ( ISF) உதவியால் தாயகம் திரும்பினார்

24.11.2015

தாயகம் திரும்பிய முகமது சாலினை அவரது வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தனர் மேலப்பாளையம் SDPI  நிர்வாகிகள் தொகுதி இணைச்செயலாளர் ஜெபா ,பகுதி தலைவர் பஷீர் ,செயலாளர் மீரான்
நேரில் சென்று விசாரித்தனர்

https://m.facebook.com/sdpitnvl/

Monday, November 23, 2015

சவுதியில் தவித்த மேலப்பாளையம் இளைஞர் மீட்பு

சவுதியில் தவித்த மேலப்பாளையம் வாலிபர் நாடு திரும்ப SDPI கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர்களின் நலன் காக்கும் இந்தியன் சோஷியல் போரம் (ISF) உதவி

23.11.2015

மேலப்பாளையம்  ஆசுரா கீழ தெருவில் வசிக்கும் இபுராகிம் அவர்களின் மகன்  i.முஹம்மது ஷாலின் என்ற வாலிபர் சவூதி அரேபியா ரியாத் நசிம் என்ற பகுதிக்கு வீட்டு படித்த இளைஞரை டிரைவர் வேலை என்று அழைக்கப்பட்டு அதிகபடியான  வேலைகளை வாங்கி உள்ளனர்.

தான் படும் கஷ்டங்களை இந்திய சோசியல் போரம் (ISF ) தொடர்பு கொண்டு உதவியை நாடியுள்ளார்

இந்திய சோசியல் போரம் ரியாத் தமிழ் பிரிவு பொதுச்செயலாளர் பொறியாளர் ரஷீத் கான் மற்றும் செயலாளர் சர்தார் அவர்களை தொடர்பு கொண்டு தனக்கு உதவி செய்யுமாறு கேட்டார்.பின்பு தனது நிலை மோசமாக இருப்பதால்  தனக்கு தங்குவதற்கு இடம் வேண்டும் என்று கூறினார் கடந்த ஒரு மாத காலமாக தங்க வைத்து அனைத்து உதவிகளையும் செய்து. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி பிறகு அவருடைய அரபி இடமும் பேசி  இந்தியா செல்வதற்கான விமான டிக்கட் எடுத்து ஊருக்கு அனுப்பி உள்ளார்கள்.

https://m.facebook.com/sdpitnvl/

Sunday, November 22, 2015

கொட்டும் மழையிலும் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்த SDPI கட்சியினர்

கொட்டும் மழையிலும்
மக்கள் நலன் காக்க

நெல்லை SDPI சார்பாக

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்

22.11.2015

SDPI கட்சி பசுமை மேலப்பாளையம் திட்டத்தின் மூலமாக வாரம் விட்டு வாரம் இலவச மருத்துவ முகாமை நடத்தி வருகிறது

அதன் ஒரு பகுதியாக மேலப்பாளையத்தில்.

1,SDPI கட்சி மாவட்ட அலுவலகம் முன்பு

2, அரசு மருந்துவ மனை

ஆகிய  இரண்டு இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது

1000 மேற்பட்ட மக்கள் பயன்பெற்றனர்

டெங்கு தடுப்பு பற்றிய  விழிப்புணர்வு முகாம்

1,தண்டன் லெப்பை தெரு

2,மோத்தை மீரா பிள்ளை தெரு

3, ஆளபிள்ளை தெரு

ஆகிய மூன்று தெருக்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது

இம்முகாமை மாவட்ட தலைவர் K.S ஷாகுல் ஹமீது உஸ்மானி துவங்கி வைத்தார்

தொகுதி இணைச்செயலாளர் ஜெபா ,பகுதி தலைவர் பஷீர் ,செயலாளர் மீரான் ,துணைதலைவர் கல்வத் ,இணைச்செயலாளர் சுல்தான் பாதுஷா மற்றும் கட்சியின் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்

https://m.facebook.com/sdpitnvl/

Wednesday, November 18, 2015

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக SDPI கோரிக்கை

2 ஆண்டுகள் கழித்து நாடு திரும்பும் தொழிலாளர்களுக்கு டிவி,உள்ளிட்ட பொருட்களுக்கான சுங்க வரியை நீக்க வலியுறுத்தல்..!!
************************************
துபாய்: வெளிநாடுகளில் 2 ஆண்டுகள் பணிபுரிந்து விடுமுறையில் நாடு திரும்பும் தொழிலாளர்கள் கொண்டு வரும் டிவி,உள்ளிட்ட பொருட்களுக்கான சுங்க வரியை நீக்க வேண்டும்.அதே போன்று வெளிநாட்டில் உயிரழக்கும் இந்திய தொழிலாளர்கள் உடலை கட்டணமின்றி தாயகம் எடுத்துவர மத்திய அரசு ஏற்பாடும் செய்ய வேண்டும் என எஸ் டி பி ஐ தமிழக தலைவர் தெஹ்லான் பாகவி வலியுறுத்தியுள்ளார் வெளிநாட்டு சுற்றுபயணமாக அமீரகம் வருகை தந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: வெளிநாட்டு வாழ் இந்திய மக்கள் அதிகப்படியான அன்னிய செலவாணியை இந்தியாவுக்கு ஈட்டி தருகிறார்கள். இவர்களுக்கு வேண்டிய நலபணிகளை இந்திய அரசு செய்து தரவேண்டும்.பிற நாடுகள் வெளிநாடுகளில் வாழும் தம் மக்களுக்கு அதிகப்படியான நலப்பணிகள் செய்து தருகிறார்கள்.
வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் உயிரழப்பு, திடீர் வேலை இழப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகும் போது அவர்கள் இந்திய அராங்கம் தேவையான உதவிகளை செய்ய முன் வர வேண்டும் ஆனால் இந்திய அரசாங்ம் வெளிநாட்டு வாழ் இந்திய மக்களுக்கு தேவையான நலப்பணிகளை செய்வதில்லை.
அதேபோன்று வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு நலப்பணி மேற்கொள்ள வெளிநாட்டு வாழ் நல வாரியம் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.வெளிநாட்டில் உயிரழக்கும் ஏழை தொழிலாளர்களின் உடலை தாயகத்திற்கு கட்டணமின்றி விமானத்தில் எடுத்து வர இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும். அதே போன்று இவை அனைத்தையும் எங்கள் கூட்டணியில் தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்வோம்
அதே போன்று 2 ஆண்டுகள் கழித்து வெளிநாடுகளில் பணிபுரிந்து விடுமுறை ஊர் திரும்பும் தொழிலாளர்கள் கொண்டு வரும் டிவி உள்ளிட்ட சில பொருள்களுக்கு சுங்க வரி விதிக்கப்படுகிறது.இவற்றை ரத்து செய்ய வேண்டும். சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தமிழகத்தில் 100க்கும் மேற்பட்டதொகுதிகளில் தேர்தல் பணிகுழுவை அமைத்து களப்பணியை துவங்கி விட்டோம்.க‌டந்த தேர்தலில் நாங்கள் போட்டியிட்டோம் நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுகவை ஆதரித்தோம் . தமிழகத்தை பொருத்த வரை திராவிட கட்சிகள்தான் ஆட்சியிலும் எதிர்கட்சியாகவும் உள்ளது திரவிட தொடக்க கால கொள்கை மற்றும் மதவெறியை எதிர்த்து ,ஆதிக்க சக்திகளை எதிர்த்து உருவானது திராவிட கட்சிகள் என்பதை அனைவரும் அறிவோம் . எனவே பாஜக காலூன்றாத வகையில் மதசார்பற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணியில் எஸ்டிபிஐ இணையும் .
தமிழகத்தில் 3வது அணி தேவையில்லை. இதனால் ஓட்டுக்கள் சிதறும் எனவே மூன்றாவது அணியில் இருக்க கூடிய ஏனைய கட்சிகளும் சிறு சிறு கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றினைய வேண்டும் ஓரணியில் திரள வேண்டும். எஸ்டிபியை கட்சியில் முஸ்லிம்கள் மட்டும் இல்லை அனைத்து சமூகத்தவரும் இணைந்து வருகிறார்கள். கட்சி வலிமை பெற்று வருகிறது. எனவே வரக்கூடிய தேர்தலில் எங்கள் வலிமையை அறிந்து 5க்கும் மேற்பட்ட தொகுதிகளை கூட்டணி கட்சிகளிடம் கேட்போம். தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை ,குமரி,ராமநாதபுரம்,மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் எஸ்டிபிஐ வலிமையாக உள்ளது.இதனை தவிர மற்ற மாவட்டங்களிலும் வளர்ச்சி பெற்று வருகிறது.அதே போன்று தமிழகத்தில் சட்டசபை தேர்தலை தொடர்ந்து வரக்கூடிய தேர்தலிலிலும் கணிசமான இடங்களை கைப்பற்றுவோம்
கடந்த‌ தேர்தலில் பாஜாக வளர்ச்சி என்ற கோஷத்தை மக்களிடம் வைத்து ஓட்டு வாங்கி ஜெயித்து விட்டு வளர்ச்சிக்கான எவ்வித‌ நடவடிக்கையை எடுக்காமல் இருப்பது மக்களுக்கு கொடுத்திருக்க கூடிய நேர் விரோதமான செயல்.பாஜக மற்றும் சங்க்பரிவார் அமைப்புகளால் ஏற்படுத்தப்படும் மாட்டுகறி பிரச்சனை ,முகத்தில் கரிபூசுவோம் என்பது போன்ற பல்வேறு செயல்களினால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள். அறிஞர்கள்,எழுத்தாளர்கள் விருதுகளை திருப்பி அளிக்கிறார்கள் இது போன்ற செயல்கள் இந்தியாவின் இமேஜை குறைத்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் மூடிஸ் என்ற நிறுவனமும் இது போன்ற சம்பவங்களால் பிரதமர் மோடி அரசின்மீது நம்பகதன்மை வெளிநாட்டில் குறைந்து விடும் என வலியுறுத்தியுள்ளது. மத்திய பாஜக அரசின் மோசமான நடவடிக்ககளுக்கு பலன் தான் பீகாரில் கிடைத்த தோல்வி இனியாவது பாஜக அரசு தங்களை திருத்தி கொண்டு நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களது விருப்பம் மத்திய அரசு இனியும் மோசமான நடவடிக்கைகளை தொடர்ந்தால் பீகாரை விட மோசமான தோல்விகளை மக்கள் கொடுப்பார்கள்
அமீரகம் பெரும்பாண்மை முஸ்லிம்கள் வாழும் நாடுகளாக இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அவரவருக்கான‌ மத சுந்ததிரம் தரப்பட்டுள்ளோடு அனைவரும் நல்லிணக்கதோடு
ஒருவருகொருவர் அன்போடு வாழும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளாது.இத்தகைய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ள அமீரக ஆட்சியாளார்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.இதனை இந்தியாவின் தற்போதைய மத்திய ஆட்சியாளர்கள் முன்மாதிரியாக எடுத்து நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் மதசுந்ததிரத்தை பாதுகாப்பதோடு நாட்டில் நல்லிணக்கம் நிலைத்து தளைத்து நம் நாடு முன்னேற்ற பாதையில் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தகவல் உதவி :- தினகரன் நாளிதழ்
பதிவு செய்த நேரம்:2015-11-17 22:17:08
http://m.dinakaran.com/Detail.asp?Nid=179031