Wednesday, November 25, 2015

மக்களை சந்திப்போம் SDPI பிரச்சார பயணம் மாநில தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பு

தமிழகம் தழுவிய மக்களை சந்திப்போம் பிரச்சாரத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி! - SDPI மாநில தலைவர் தலைமையில் சென்னையில் இன்று 25.11.2015 நடைபெற்றது !

************************
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று (நவ.25) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக, மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து, வரும் நவ.28 முதல் டிசம்பர் 13 வரை மாநில முழுவதும் ‘மக்களை சந்திப்போம்’ என்ற பெயரில் வாகன பிரச்சார பயணம் நடைபெறவிருக்கிறது. கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வரை இந்த பிரச்சார பயணம் நடைபெறுகிறது.
பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும், தமிழகத்தின் நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என மாநில அரசை வலியுறுத்தியும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனையாக உள்ள கட்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும்; விவசாயிகள், தொழிலாளர்களை பாதிக்கும் வகையிலான மக்கள் விரோத சட்டங்களையும், சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு எதிரான போக்கையும் கைவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும் ஆகிய இந்த ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரச்சார பயணம் நடைபெறுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை மதுவால் இன்றைக்கு லட்சக்கணக்கான குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. சமூக சீர்கேடுகளும், குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. ஆகவே, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி உட்பட அனைத்து கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கோரி வருகின்றன. ஆனால் அரசு அதுகுறித்த எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக மது விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. ஆகவே, ஒரு பொறுப்புள்ள அரசாக, குடிமக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் நடவடிக்கையில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த திமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், இதனை 7 சதவீதமாக அதிகரித்து வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த வேளையில், கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரித்து வழங்குவேன் என முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், தேர்தல் முடிந்ததும் அதுகுறித்த எந்த நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை. ஆகவே, முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலையை கருத்தில்கொண்டு இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் பல ஆக்கிரமிப்பாளர்களின் கைகளில் சிக்கியுள்ளன. இதன் காரணமாகவே சமீபத்திய மழையில் தமிழகம் மோசமான விளைவுகளை சந்தித்து வருகின்றது. மேலும், ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் அமலைச் செடிகளால் தூர்ந்து போய் காணப்படுகின்றன. இதனால் நீர் சேமிப்பது தடைபடுவது மட்டுமின்றி, குடியிருப்புக்குள் அந்த நீர் புகுந்து பேரிடர்களையும் தமிழகம் சந்தித்து வருகின்றது. தமிழகத்தின் பல முக்கிய நதிகள் ஆலைக்கழிவுகளாலும், சாக்கடைகளாலும் நிரம்பி வழியும் அபாயகரமான சூழல் நிலவி வருகின்றது. ஆகவே, தமிழக அரசு நீர்நிலைகளை பாதுகாப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக மீனவர்களின் வாழ்வுரிமை பிரச்சனையாக நீடித்து கொண்டிருக்கும் கட்சத்தீவு பிரச்சனையில் மத்திய அரசு தமிழர்களுக்கு தொடந்து துரோகம் இழைத்து வருகின்றது. இலங்கைக்கு ஆதரவாக, தமிழக சட்டமன்ற தீர்மானத்துக்கு எதிரான நிலையை எடுத்து வருகின்றது. ஆகவே கட்சத்தீவை மத்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும்.
மேலும், மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பதவியேற்றது முதல் தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகின்றது. அன்னிய மற்றும் தனியார் முதலாளிகளின் நலனுக்காக விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிராக அவசர சட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இது கண்டிக்கத்தக்கது. மேலும், பாஜக தலைவர்கள், அமைச்சர்கள் பலர் நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிராகவும், சிறுபான்மை மற்றும் தலித்களுக்கு எதிராகவும் பேசிவருகின்றனர். இத்தகைய செயல் மதசார்பற்ற இந்திய ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்குகிறது. ஆகவே மத்திய அரசு இத்தகைய போக்கை கைவிட வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் அக்கறை காட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பொருட் சேதத்தையும், உயிழப்பையும் சந்தித்துள்ளன. மழை, வெள்ளம் காரணமாக சுமார் 180 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பல குடியிருப்புகளை சுற்றி இன்னும் மழை நீர் தேங்கியுள்ளதால் அவர்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இத்தகைய பெரும் அவல நிலைக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும், நீர்நிலைகள், மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களை தூர்வாருவதிலும், சீர்செய்வதிலும் தமிழக அரசு மேற்கொண்ட மெத்தனப் போக்கும், அலட்சியமுமே காரணம் என்பதை மறுக்கவியலாது. வெள்ளம் வந்த பிறகு தமிழக அரசும், அதிகாரிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னரே மேற்கொண்டிருந்தால், பெரும் இழப்புகளை தவிர்த்திருக்க முடியும்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த கனமழை வெள்ளம் காரணமாக சுமார் 8 ஆயிரத்து 400 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு மதிப்பிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இதில் 2 ஆயிரம் கோடி ரூபாயை முதல்கட்ட நிவாரணத்திற்காக உடனடியாக மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு முதல்கட்ட நிதியாக ரூ.940 கோடியை வழங்குவதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நிதி போதுமானதல்ல. ஆகவே, மத்திய அரசு தமிழக அரசு கோரியுள்ள முதல்கட்ட நிவாரண நிதியை உடனடியாக வழங்குவதோடு, வெள்ள சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்ய மத்திய ஆய்வு குழுவையும் உடனடியாக அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு, தமிழக வெள்ள பாதிப்பை பேரிடர் நிகழ்வாக அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தமிழக அரசு மத்திய அரசின் நிவாரண நிதியை பயன்படுத்தி, தேர்தல் அரசியல் நோக்கில் செயல்படாமல், உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இதுதொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்து, அனைவரது ஒத்துழைப்புடன் விரைவாக செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக ரூ.5 லட்சம் வெள்ள நிவாரண நிதியாக அளிக்க உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான இல.கணேசன் அவர்கள், தமிழகத்தில் 150 பேர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்திருப்பதாக தெரிவித்திருந்தார். ஐ.எஸ், அமைப்பின் தீவிரவாத செயலால் உலகமே அச்சம் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் யாரும் அந்த இயக்கத்தில் இல்லை என மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. ஆனால், தமிழக மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆகவே தமிழக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் இல.கணேசன் அவர்களை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் ஊடகங்களின் மீதான தாக்குதல்கள், அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன. காரைக்குடியில் செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் 7 தொலைக்காட்சி நிரூபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், 4 ஆண்டுகால தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதற்காக விகடன் மற்றும் முரசொலி நாளிதழ் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அரசின் இத்தகைய அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா, மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், உஸ்மான் கான், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜூனைத் அன்சாரி, தென்சென்னை மாவட்டத் தலைவர் நேதாஜி ஜமால், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பிலால் ஆகியோர் உடனிருந்தனர்.

https://m.facebook.com/sdpitamilnadu/

https://m.facebook.com/makkalaisanthippom/

No comments:

Post a Comment