இலங்கைக்கு சாதகமான தீர்மானத்திற்கு ஆதரவு!
பாஜக அரசின் துரோக செயலுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்!
********************************************************
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டு விசாரணையில், இலங்கை நீதித்துறையின் சட்ட வரம்புக்கு உட்பட்டு, காமன்வெல்த் நாட்டு நீதிபதிகள் இணைந்த குழு விசாரணை நடத்த, ஐ.நா. மனித உரிமைகள் அவை கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது. இலங்கைக்கு ஆதரவான இந்த தீர்மானம், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் துணையுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும்.
இனப் படுகொலைகளை நடத்திய குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் வகையிலும், உறவுகளை இழந்தவர்களுக்கு நீதியை மறுத்து, பெரும் அநீதியை பெற்றுத்தரும் வகையிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தது வெட்கக்கேடானது மட்டுமின்றி, தமிழர்களுக்கு செய்யும் துரோகமுமாகும். அமெரிக்கா மற்றும் மத்திய அரசின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போரின் போது லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர், லட்சக்கணக்கானோர் படுகாயமுற்றனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்ற குரல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களாலும், மனித உரிமை ஆர்வலர்களாலும் முன் வைக்கப்பட்டது.
இந்த சூழலில் செப்டம்பர் 14-ஆம் தேதி முதல், ஜெனிவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், கடந்த செப் 16 அன்று இலங்கை போர் குறித்த மனித உரிமைகள் தொடர்பான விசாரணை அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையர் சையத் ராத் அல் ஹூசைன் தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கை மூலம் இலங்கையில் தமிழ் மக்கள் மீது அரசும் படைத் தரப்பு நடத்திய வன்கொடுமைகள் மிக மோசமானவை என்பது சர்வதேசத்தின் முன் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுக்கு நடந்த கொடூரங்கள் மறைபட்டுப் போகுமோ என்று அஞ்சியிருந்த வேளையில், ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு மிகத் தெளிவாக அவலங்களை அம்பலப்படுத்தியது. இதன்மூலம் உலகத் தமிழர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் விருப்பமாக இருந்த சர்வதேச விசாரணை ஐ.நா.வால் அமைக்கப்படும் என நம்பியிருந்த வேளையில், இலங்கைக்கு சாதகமாக, குற்றவாளிகளை தப்பவைக்கும் முகமாக, மேற்கண்ட தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் துணையுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஈழத்தமிழர்கள் விசயத்தில் முன்னர் காங்கிரஸ் மேற்கொண்ட அதே அணுகுமுறையைத்தான் தற்போது ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசும் மேற்கொண்டுவருகிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருப்போம் என பாஜக தலைவர்கள் முழங்கினர். ஆனால், ஈழத்தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய இந்தியா, இலங்கைக்கு ஆதரவான அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு அளித்து ஒட்டுமொத்த தமிழர்களையும் ஏமாற்றிவிட்டது. மேலும், தமிழக சட்டமன்ற தீர்மானத்தையும் கிஞ்சிற்றும் மதிக்காமல் அலட்சியம் செய்துள்ளது. இந்த துரோக செயலுக்காக பாஜக தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
இதன்மூலம் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு இலங்கையுடனான வர்த்தக உறவுதான் முக்கியமே தவிர, தமிழர்களின் நலனோ, தமிழகத்தின் கோரிக்கையோ அல்ல என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
இவ்வாறு அவர் அந்த கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
http://popularfronttn.org/
No comments:
Post a Comment